ஊதியம் வழங்கக்கோரி புதுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள் பணியை புறக்கணித்து தர்ணா
ஊதியம் வழங்கக்கோரி புதுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள் பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கடந்த மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு ஊதியம் வழங்கக்கோரி நகராட்சி ஊழியர்கள், நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை நகராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு வந்த ஊழியர்கள் பலர், பணியை புறக்கணித்து வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் ஊதியம் வழங்க கோரி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஆணையருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, தாசில்தார் முருகப்பன், நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமரசம்
பேச்சு வார்த்தையின்போது, உங்களது கோரிக்கைகள் தொடர்பாக வருகிற 2-ந் தேதி அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறினர். அதனை ஏற்று தர்ணாவை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இதற்கிடையில் தூய்மை பணியாளர்கள் சம்பளம் மற்றும் தீபாவளி பண்டிகை முன் பணம் கேட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால், நேற்று நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story