மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Oct 2020 6:23 AM IST (Updated: 30 Oct 2020 6:23 AM IST)
t-max-icont-min-icon

நச்சலூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நச்சலூர், 

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள இனுங்கூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 34). இவர் கடந்த 27-ந்தேதியன்று தனது மொபட்டில் புதுப்பட்டியில் இருந்து நச்சலூருக்கு சொந்த வேலை காரணமாக சென்றார். பின்னர் அதே மொபட்டில் மீண்டும் புதுப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். இந்தநிலையில் நச்சலூர் அருகே ஓந்தாம்பட்டிக்கும்-புதுப்பட்டிக்கும் இடையே வாரிப்பாலம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ணவேணியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர்.

பின்னர் கிருஷ்ணவேணியிடம் கண் இமைக்கும் நேரத்தில், அவரது கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர்.

போலீசார் வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணவேணி திருடன்... திருடன்... என சத்தம்போட்டார். ஆனால் மர்மநபர்கள் தாலிச் சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கிருஷ்ணவேணி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மொபட்டில் சென்ற பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story