திருச்சியில் ரூ.6 கோடி கேட்டு தொழில் அதிபர் மகன் கடத்தல் போலீசார் துரத்திச்சென்று மீட்டனர்; கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம்
திருச்சியில் ரூ.6 கோடி கேட்டு பிரபல தொழில் அதிபரின் மகன் 3 பேர் கும்பலால் காரில் கடத்தப்பட்டான். போலீசார் அவர்களை துரத்திச்சென்று சிறுவனையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் மீட்டனர். தப்பி ஓடிய கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி வார்னஸ் சாலையில் பிரபல தொழில் அதிபர் பிஎல்.ஏ. கண்ணப்பனின் வீடு உள்ளது. அந்த வீட்டு முன்பு அவரது 12 வயது மகன் கிருஷ்ணன் என்கிற முத்தையா, நேற்று முன்தினம் மாலை சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது காரில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள், அச்சிறுவனிடம் நைசாக பேச்சுக்கொடுத்து, கையால் முதுகை அணைத்தபடி அழைத்து சென்று காரில் குண்டுக்கட்டாக தூக்கிப்போட்டு கடத்தி சென்றனர்.
வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த மகனை நீண்ட நேரமாக காணாமல் தவித்த குடும்பத்தினர் உடனடியாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, அவர் ‘மைக்‘ மூலம் மாநகர போலீசாரையும், திருச்சி மாவட்ட போலீசாரையும் உஷார்படுத்தி தகவல் கொடுத்தார். மேலும் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்து மாநகரில் போலீசாரால் நிறுவப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
ரூ.6 கோடி கேட்டு மிரட்டல்
அதே வேளையில் பிஎல்.ஏ. கண்ணப்பனின் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்தனர். அப்போது 3 பேர் கும்பல் சிறுவனை காரில் கடத்தி சென்றது கண்டறியப்பட்டது. காரின் பதிவெண் கண்டுபிடிக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் பதிவெண்ணை வைத்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஆய்வு செய்தபோது, காரில் போலியான பதிவெண் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்கிடையே ஓரிரு மணிநேரத்தில் கடத்தல் கும்பலில் ஒருவன் சிறுவன் கிருஷ்ணனின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து, ரூ.6 கோடி கொடுத்தால் உங்கள் மகனை உயிருடன் விட்டு விடுகிறோம். இல்லையேல்... நடப்பதே வேறு! என்று மிரட்டி எச்சரிக்கை விடுத்தான்.
ஆட்டோவில் மோதி விபத்து
இதனால், சிறுவனின் குடும்பத்தாருக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் தவிப்புக்குள்ளானார்கள். உடனடியாக திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, ஸ்ரீதர், சண்முகப்பிரியா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் ஆங்காங்கே இரவு வேளையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதற்கிடையே இரவு வேளையில் திருச்சி வயலூர் ரோட்டில் சோமரசம்பேட்டையை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த கார், அங்கு சாலையில் வந்த ஆட்டோ ஒன்றில் இடித்தது. இதனால், ஆட்டோ டிரைவர் காரை மறிக்கவும், காரை டிரைவர் நிறுத்தாமல் திருப்பிக்கொண்டு மீண்டும் வயலூர் ரோட்டில் திருச்சி மாநகரை நோக்கி வேகமாக வந்தார். ஆட்டோ மீது விபத்து ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற காரை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டுகள் காளிமுத்து (சோமரசம்பேட்டை), பாலசுப்பிரமணியன் (ஜீயபுரம் சப்-டிவிசன்) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கையில் காயம்
வயலூர் சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் திருச்சி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், ஏட்டு இளங்கோ தலைமையிலான 8 பேர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக விபத்தை ஏற்படுத்திய கார் வேகமாக வந்ததால், அந்த காரை நிற்க செய்யும் வகையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் ஒரு கையை நீட்டி தடுக்க முயன்றார்.
ஆனால், கார் நிற்காமல் சப்-இன்ஸ்பெக்டரின் கையில் இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. கையில் காயத்துடன் அங்கிருந்த போலீசாரும் காரை துரத்த தொடங்கினர்.
முட்டுச்சந்தில் சிக்கிய கார்
அதே வேளையில் கார் வயலூர் ரோட்டில் ராமலிங்க நகர் விஸ்தரிப்பு பகுதியில் திரும்பி வேகமாக சென்றது. ஒரு கட்டத்தில் கார் ஒரு முட்டுச்சந்தில் போய் மேலும் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டது. அந்த வேளையில் தப்பித்தால் போதும் என்று நினைத்து காரில் இருந்து 3 பேர் இறங்கி சாக்கடை கால்வாய் வழியாக சென்று தப்பி ஓடி இருளில் மறைந்தனர்.
பின்னர் போலீசார் அந்த காரின் அருகில் சென்று பார்த்தபோது, காரில் கடத்தப்பட்ட சிறுவன் கிருஷ்ணன் இருந்தான். அப்போதுதான் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் துரத்தியபோது, காரில் இருந்த கடத்தல் கும்பல் தங்களை அடையாளம் கண்டுதான் போலீசார் துரத்திவருவதாக நினைத்தது தெரியவந்தது.
சிறுவன் மீட்பு
பின்னர் காருடன், கடத்தப்பட்ட சிறுவன் கிருஷ்ணனை போலீசார் மீட்டனர். பின்னர், அவன் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையம் கொண்டுவரப்பட்டான். சிறுவனை கடத்திய ஆள் கடத்தல் கும்பலில் இருந்த 3 பேருக்கும் 20 வயதில் இருந்து 25 வயதிற்குள்தான் இருக்கும் என கூறப்படுகிறது.
காரின் சேஸ் எண்ணை வைத்து மேற்கொண்ட விசாரணையில், அந்த கார் திருச்சி மாவட்டம் கீழக்குறிச்சியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கு சொந்தமான கார் என தெரியவந்தது. அவரை போலீசார் அழைத்து விசாரித்தபோது, வெளியில் சென்றுவர காரை பிரகாஷ் என்ற நண்பர் இரவல் வாங்கி சென்றது எனவும் தெரியவந்தது.
கும்பல் அடையாளம் தெரிந்தது
எனவே, கடத்தல் கும்பலில் உள்ள ஒருவர் பிரகாஷ் என்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற இருவர், பொன்மலை போலீஸ் எல்லைக்குட்பட்ட கல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. கடத்தல் கும்பலை தனிப்படையினர் தேடிவருகிறார்கள். மேலும் அவர்களின் குடும்பத்தாரையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருச்சியில் சினிமா பாணியில் சிறுவனை கடத்திய கும்பலை போலீசார் துரத்தி சென்று மீட்டதற்கு, போலீஸ் கமிஷனர் லோகநாதன் வெகுவாக பாராட்டி உள்ளார்.
Related Tags :
Next Story