சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் - இருவரும் பரஸ்பர வணக்கம் தெரிவித்தனர்


சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் - இருவரும் பரஸ்பர வணக்கம் தெரிவித்தனர்
x
தினத்தந்தி 30 Oct 2020 11:45 AM GMT (Updated: 30 Oct 2020 12:30 PM GMT)

தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரே விமானத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தனர். விமானத்தில் இருவரும் பரஸ்பர வணக்கம் தெரிவித்து கொண்டனர்.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது பிறந்த நாளான இன்று(வெள்ளிக்கிழமை) தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல பழைய விமான நிலையம் வந்தார். அவரை அ.தி.மு.க.வினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

அதே விமானத்தில் தேவர் ஜெயந்தி குரு பூஜையில் கலந்துகொள்ள தி.மு.க. தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினும் செல்ல உள்நாட்டு முனையம் வந்தார். அவரை தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள், நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

ஒரே விமானத்தில் முதல் வரிசையில் இடதுபுறம் ஜன்னல் பக்க இருக்கையில் எடப்பாடி பழனிசாமியும், வலதுபுறம் ஜன்னல் பக்க இருக்கையில் மு.க.ஸ்டாலினும் அமர்ந்தனர். முதலில் மு.க.ஸ்டாலின் விமானத்தில் ஏறி அமர்ந்தார்.

இறுதியாக விமானத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏறினார். அவர் இருக்கையில் அமரச்செல்லும் முன்பு மு.க.ஸ்டாலினை பார்த்து வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு மு.க.ஸ்டாலினும் வணக்கம் தெரிவித்தார். முதல்-அமைச்சருடன் இந்த விமானத்தில் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோரும் சென்றனர். முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் முதல்முறையாக ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பயணித்த விமானம் நேற்று மாலை 6 மணி அளவில் மதுரை வந்தது. இருதலைவர்களையும் வரவேற்க விமான நிலையத்தில் அவர்களது கட்சியினர் முன்னதாகவே திரண்டிருந்தனர்.

மாலை 6.15 மணி அளவில் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரை வாழ்த்தி தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினர். முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தமிழரசி, பொன்.முத்துராமலிங்கம், மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் தளபதி, எம்.எல்.ஏ.க்கள் மூர்த்தி, சரவணன் உள்பட பலர், மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அவர் காரில் புறப்பட்டு மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.

இதற்கிடையே கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காக காத்திருந்தார். அப்போது போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், தொண்டர்கள் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது ராமகிருஷ்ணனின் கண் கண்ணாடி உடைந்து கண்ணில் ரத்தம் வழிந்தது. இதனைத்தொடர்ந்து தி.மு.க.வினர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

மாலை 6.55 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது அ.தி.மு.க.வினர் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். அவரை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் புறப்பட்டார். மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள டி.வி.எஸ். தங்கும் விடுதிக்கு சென்றார். இரவில் அங்கு தங்கினார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, அங்கிருந்து பசும்பொன் புறப்பட்டு செல்கின்றனர்.

இதுபோல் மு.க.ஸ்டாலினும் இரவில் மதுரையில் தங்கினார். இன்று காலையில் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அவரும் பசும்பொன் புறப்படுகிறார்.

முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் ஒரே நேரத்தில் நேற்று மதுரைக்கு வந்ததால் மதுரை மாநகர் மற்றும் புறநகர் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story