ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதியில் 3-ந் தேதி ஓட்டுப்பதிவு - இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை ஓய்கிறது


ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதியில் 3-ந் தேதி ஓட்டுப்பதிவு - இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை ஓய்கிறது
x
தினத்தந்தி 30 Oct 2020 11:30 PM GMT (Updated: 30 Oct 2020 7:35 PM GMT)

அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான பகிரங்க பிரசாரம் நாளை(ஞாயிற்றுக் கிழமை) ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரசை சேர்ந்த முனிரத்னா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார்.

சிரா தொகுதி சட்டசபை உறுப்பினராக பணியாற்றிய ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சத்யநாராயணா உடல்நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதையடுத்து கர்நாடக சட்டசபையில் ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இதில் ஆர்.ஆர்.நகரில் பா.ஜனதா சார்பில் முனிரத்னா, காங்கிரஸ் சார்பில் குசுமா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், சிராவில் பா.ஜனதா சார்பில் ராஜேஸ்கவுடா, காங்கிரஸ் சார்பில் டி.பி.ஜெயச்சந்திரா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் அம்மஜம்மா (மறைந்த எம்.எல்.ஏ. சத்யநாராயணா மனைவி) ஆகியோரும் போட்டியில் உள்ளனர். 2 தொகுதிகளிலும் மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இரு தொகுதிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்கள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளில் பகிரங்க பிரசாரம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. இதனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. இடைத்தேர்தல் நடக்கும் இந்த 2 தொகுதிகளும் எதிர்க்கட்சிகளின் வசம் இருந்தவை. எனவே இந்த தொகுதிகளை கைப்பற்ற ஆளும் பா.ஜனதா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தங்கள் தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இதனால் கொரோனா பீதியையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டி இருக்கிறது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகளும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் முன்னாள் மந்திரிகள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் முன்னாள் மந்திரிகள் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இடைத்தேர்தல் களத்தில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது.

முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று சிரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். நடிகர் தர்ஷன் நேற்று ஆர்.ஆர்.நகரில் பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். யஷ்வந்தபுரா, மத்திகெரே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் வந்தபடி கைகளை அசைத்து வாக்கு சேகரித்தார். அவரது இந்த பிரசாரத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர். நடிகர் தர்ஷனுடன் நடிகை அமுல்யாவும் திறந்தவேனில் வந்து வாக்கு சேகரித்தார். ஆர்.ஆர்.நகரில் பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னாவை தோற்கடிக்க காங்கிரஸ் தலைவர்கள் முழு மூச்சாக தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மத்திய-மாநில அரசுகள் வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதாவது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பிரசாரத்தில் பங்கேற்கும் தொண்டர்கள், சமூக இடைவெளியை பின்பற்றியதாக தெரியவில்லை. பலர் முகக்கவசம் அணியாமல் வலம் வந்ததை பார்க்க முடிந்தது. இதனால் மாநிலத்தில் குறைந்துள்ள கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுகிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை யார் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

Next Story