தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு “கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை” - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு “கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை” - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2020 10:00 PM GMT (Updated: 31 Oct 2020 12:08 AM GMT)

“தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவில்பட்டி, 

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை கருணாநிதி நீக்கிய பின்னர் தமிழகத்தில் நடைபெற்ற 10 சட்டசபை தேர்தல்களில் 7-ல் அ.தி.மு.க.வும், 3-ல் தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் தேசிய கட்சிகள் இதுவரையிலும் வேரூன்றவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு பல திரைப்பட நடிகர்கள், சிவாஜி முதல் கமல்ஹாசன் வரையிலும் கட்சிகள் ஆரம்பித்து இருந்தாலும், யாரும் நிலைத்து நிற்கவில்லை.

அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளே என்றும் நிலைத்து நிற்கும் கட்சிகளாக உள்ளன. மற்ற கட்சிகளைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தங்களது ஆயுட்காலம் வரையிலும் முதல்வர்களாகவே இருந்து மறைந்தனர். அ.தி.மு.க. அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் எத்தனை கட்சிகள் வந்தாலும், எத்தனை போட்டிகள் இருந்தாலும், தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாகக்குழு உறுப்பினர்களை நியமிப்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு நிர்வாகக்குழு உறுப்பினராக டாக்டர் சண்முக சுப்பையா நியமனம் செய்யப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் மீதான புகார் குறித்து மத்திய அரசுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

இதுகுறித்து விசாரணை நடத்தி, மேல் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த புகாரில் உண்மை இருந்தால், நியமனம் தொடர்பாக மறுபரிசீலனை செய்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story