பாம்பன் பாலத்தில் ராட்சத கிரேனுடன் மிதவைகள் மோதல் - சேது எக்ஸ்பிரஸ் ரெயில் மண்டபத்துடன் நிறுத்தம்
பாம்பன் ரெயில் பாலத்தில் ராட்சத கிரேனுடன் மிதவைகள் மோதியதால், அந்த பாலத்தில் ரெயில் போக்குவரத்து நடைபெறவில்லை. சேது எக்ஸ்பிரஸ் ரெயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டது.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த பாலம் 104 ஆண்டுகளை கடந்து, மிகவும் பழமையான பாலமாகிவிட்டதால் இந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் இடைவெளியில் ரூ.250 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ளது. பலத்த மழையும் பெய்தது. பாம்பன் பகுதியில் கடந்த 2 நாட்களாக கடல் அலையின் வேகம் அதிகமாக இருப்பதால் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் புதிய ரெயில் பாதை பணிகளுக்காக கடலில் நிறுத்தி இருந்த ராட்சத கிரேனுடன் கூடிய 2 மிதவைகள், கடல் அலையின் வேகத்தில் இழுத்துவரப்பட்டு ரெயில் பாலத்தின் தூண்கள் மீது மோதியபடி நின்றன.
இதுகுறித்து உடனடியாக தூக்குப்பாலம் பணியில் இருந்த ரெயில்வே ஊழியர், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ரெயில்வே பொறியாளர்கள் மற்றும் புதிய ரெயில் பால கட்டுமான பிரிவு அதிகாரிகள் விரைந்து வந்தனர். தூக்குப்பாலத்தின் அருகில் தூண்களில் மோதி நின்ற 2 மிதவைகளையும் படகுகள் உதவியுடன் இழுத்து கடலுக்குள் கொண்டு சென்று நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ரெயில் பாலத்தில் மிதவைகள் மோதியதை தொடர்ந்து நேற்று அதிகாலை சென்னையில் இருந்து ராமேசுவரம் வரவேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரெயில் மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கிரேன்களுடன் கூடிய மிதவை மோதியதால் ரெயில் பாலத்தின் தூண்களில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து ரெயில்வே பொறியாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுக்கு பின்னர், சேதம் ஏதும் இல்லாதபட்சத்தில் ரெயில் பாலத்தில் வழக்கம்போல் ரெயில் இயக்கப்படும் என்று தெரியவருகிறது.
Related Tags :
Next Story