“விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்” தனுஷ்கோடி ஆதித்தன் பேட்டி


“விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்” தனுஷ்கோடி ஆதித்தன் பேட்டி
x
தினத்தந்தி 1 Nov 2020 7:21 AM IST (Updated: 1 Nov 2020 7:21 AM IST)
t-max-icont-min-icon

“விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும்” என்று முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்தார்.

நெல்லை, 

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த தினத்தை விவசாயிகள் உரிமை தினமாக அனுசரிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அறவழி போராட்டம் நேற்று நடந்தது.

அதன்படி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு அறவழி போராட்டம் நடந்தது. முன்னதாக அங்குள்ள இந்திரா காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற அறவழி போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி.ராமசுப்பு முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போராட்டம் தொடரும்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது விவசாயிகளுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. வேளாண் உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால் விவசாய விளைபொருட்களின் உற்பத்தி அதிகரித்தது.

ஆனால் தற்போது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறது. விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். அதுவரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தும். அடுத்தகட்டமாக பொதுமக்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம்.

இவர் அவர் கூறினார்.

இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story