திருச்செந்தூரில், மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது


திருச்செந்தூரில், மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
x
தினத்தந்தி 1 Nov 2020 8:16 AM IST (Updated: 1 Nov 2020 8:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர், 

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே பூவுடையார்புரத்தைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் (வயது 45). விவசாயியான இவர் தனது விவசாய நிலத்துக்கு இலவச மின் இணைப்பு வழங்குமாறு, திருச்செந்தூர் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு மனு வழங்கினார். ஆனால் அவரது நிலத்துக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

தற்போது மின்வாரியத்தில் தட்கல் முறையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் ஆகும். எனவே முத்துலிங்கம் தனது விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்குமாறு திருச்செந்தூர் மின்வாரிய அலுவலகத்தில் சென்று மீண்டும் முறையிட்டார்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

அப்போது அங்கு பணியில் இருந்த திருச்செந்தூர் கோட்ட மின்வினியோக செயற்பொறியாளர் பொன் கருப்பசாமி தனக்கு ரூ.10 ஆயிரம் தந்தால், இலவச மின் இணைப்பு தருவதாக கூறியதாக தெரிகிறது. எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துலிங்கம், இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து பொன் கருப்பசாமியை போலீசார் கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி முத்துலிங்கத்திடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை போலீசார் கொடுத்து அனுப்பினர். அதனை பெற்றுக் கொண்ட முத்துலிங்கம் நேற்று காலையில் திருச்செந்தூர் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த பொன் கருப்பசாமியிடம் சென்று ரசாயனம் தடவிய பணத்தை முத்துலிங்கம் கொடுத்தார்.

கைது

அப்போது அங்கு மறைந்து இருந்த தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) எஸ்கால், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று, பொன் கருப்பசாமியை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரது அறையிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பின்னர் பொன் கருப்பசாமியை போலீசார் கைது செய்து காரில் அழைத்து சென்றனர்.

தொடர்ந்து தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள பொன் கருப்பசாமியின் வீட்டுக்கு அவரை போலீசார் அழைத்து சென்று, வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்செந்தூரில் மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story