புகார் கொடுக்க வருபவர்களின் குழந்தைகளுக்காக புத்தகங்கள், எழுதுபலகையுடன் பொழுதுபோக்கு அரங்கம்


புகார் கொடுக்க வருபவர்களின் குழந்தைகளுக்காக புத்தகங்கள், எழுதுபலகையுடன் பொழுதுபோக்கு அரங்கம்
x
தினத்தந்தி 1 Nov 2020 9:44 AM IST (Updated: 1 Nov 2020 9:44 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வருபவர்களின் குழந்தைகளுக்காக புத்தகங்கள், எழுதுபலகையுடன் பொழுதுபோக்கு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், 

தமிழகத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த காவல் நிலையம் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கில் இது தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், வல்லம், பாபநாசம் ஆகிய 6 இடங்களில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மகளிர் போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பெண்களில் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வருகிறார்கள்.

பொழுது போக்கு அரங்கம்

அவ்வாறு வரும் போது அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் விசாரணைக்காக பெண்கள் வரும் போது குழந்தைகளுடன் வருவதால் விசாரணை நடத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலும் புகார் கொடுக்க வருபவர்கள் குழந்தைகளுக்காக ஒரு அரங்கம் அமைக்க உத்தரவிட்டது. அதன்படி தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த அறையில் குழந்தைகளுக்கான சிறிய சைக்கிள், கிரிக்கெட் மட்டை, பந்து, பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. பள்ளிகளில் இடம் பெற்று இருப்பது போன்ற எழுது பலகைகள் குழந்தைகள் எழுதுவதற்காக வைக்கப்பட்டுள்ளன. படங்களுடன் கூடிய புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள் அடங்கிய பலகையும் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்காக வட்ட வடிவிலான சிறிய மேஜை, சிறிய இருக்கைகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

அரசு உத்தரவு

இது குறித்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா கூறுகையில், தமிழக அரசின் உத்தரவின் பேரில் குழந்தைகளுடன் நட்பு பாராட்டும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் எழுதுவதற்கான பலகை, விலங்கு, காய்கறிகள், பறவைகள் போன்றவற்றின் படங்கள், விளையாட்டு சாதனங்களும் இடம் பெற்றுள்ளன. புகார் கொடுக்க, விசாரணைக்காக வரும் பெண்கள் குழந்தைகளுடன் படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் குழந்தைகளை இந்த அரங்கில் விட்டால் விளையாடி, எழுதி பொழுதை கழிக்கும் வகையில் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது”என்றார்.

Next Story