வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2020 10:50 AM IST (Updated: 1 Nov 2020 10:50 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள். இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., விஜய் வசந்த் பங்கேற்றனர்.

நாகர்கோவில், 

மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தலின்படி குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நேற்று சத்தியாகிரக உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விஜய் வசந்த் கலந்து கொண்டார். முன்னதாக, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினத்தையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவருடைய உருவப்படத்துக்கு விஜய்வசந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

விஜய் வசந்த்

இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராபர்ட் புரூஸ், அசோகன் சாலமன், நிர்வாகிகள் சுந்தர்ராஜ், அருள்சபிதா, யூசுப்கான், லாரன்ஸ், அசோகராஜ், ஜெரால்டு கென்னடி, காமராஜ், கிறிஸ்டி ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மதியம் சுமார் 2.30 மணி அளவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பிரின்ஸ் சத்தியாகிரக உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

விஜய் வசந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது என்றால் ஏற்கனவே வந்து இருக்க வேண்டும். மத்திய அரசு 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என ஒரே நாளில் அறிவித்தது போன்று எந்த அரசியல் கட்சியினரின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர் என்றார்.

Next Story