நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பவானிசாகர் அணைக்கு, தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது.
பவானிசாகர்,
தமிழகத்தின் 2-வது பெரிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
கடந்த வாரத்தில் பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் போதிய மழை இல்லாமல் வறண்ட வானிலை காணப்பட்டது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. அதேசமயம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டமும் குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 112 கனஅடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 96.89 அடியாக இருந்தது.
நேற்று மாலை 6 மணிக்கு அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 3 ஆயிரத்து 126 கனஅடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 96.72 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
Related Tags :
Next Story