தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்


தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 2 Nov 2020 7:54 AM IST (Updated: 2 Nov 2020 7:54 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி, 

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை 5.40 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர்.

திருவிழா வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் அபிஷேகம், மதியம் உச்சிகால பூஜை, இரவு 7 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை ஆகியன நடைபெறுகின்றன. தொடர்ந்து பூங்கோவில் வாகனத்தில் ஏக சிம்மாசனத்தில் சுவாமி -அம்பாள் கோவில் வளாகத்திலேயே வலம் வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சப்பர வீதி உலா வீதிகளில் நடைபெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேரோட்டம் ரத்து

திருவிழாவின் 9-ம் நாளான 9-ந் தேதி வழக்கமாக நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு கோவில் வளாகத்திலேயே வலம் வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு கோவிலில் உள்ள புல்வெளியில் அம்மன் தவசு இருக்கும் காட்சியும், மாலை 6 மணிக்கு தவசு இருக்கும் அம்மனுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் அம்மன் சன்னதி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 12-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 13-ந் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு, அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறுகிறது. பக்தர்கள் சமூக இடைவெளியில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், கணக்கர் பாலு ஆகியோர் செய்து வருகிறார்கள். 

Next Story