தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே உரிமைகளை மீட்டெடுக்க முடியும் கனிமொழி எம்.பி. பேச்சு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என கனிமொழி எம்.பி. பேசினார்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே பல்லாகுளம் கிராமத்தில் தி.மு.க. சாா்பில் மக்கள் குறை கேட்கும் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினாா். முன்னாள் எம்.எல்.ஏ. மாா்கண்டேயன் முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. அரசிற்கு தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நேரம் இல்லை. கொரோனா நோயை வைத்து தமிழக அரசு ஊழல் நடத்தி வருகிறது. தமிழக விவசாயிகளை அடகு வைக்க 3 சட்டங்களை அ.தி.மு.க. ஆதரித்து வருகிறது. தேர்தலுக்கு முன்பு இருக்கும் 6 மாத காலங்களுக்குள் எதில் லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை மட்டுமே சிந்தித்து வருகிறது. மக்களின் நலன் பற்றி சிந்திப்பதில்லை. படித்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க தமிழக அரசு முன் வரவில்லை.
அடிப்படை வசதி இல்லை
விவசாயி என்று கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டங்களை ஆதரித்து வருகிறாா். தமிழக மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் படிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. தமிழகத்தின் உரிமைகளை அ.தி.மு.க. அரசு மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்டு வேடிக்கை பாா்த்து வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே உரிமைகளை மீட்டெடுக்க முடியும். தற்போது கொரோன நோய் பரவலை பயன்படுத்தி எம்.பி.க்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் விளாத்திகுளம் தொகுதி மக்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சி காலத்தில் விவசாயிகளின் நலன் கருதி விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு
முன்னதாக கனிமொழி எம்.பி. நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், “அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவில் கையெழுத்திட கவர்னர் காலதாமதம் செய்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்துக்கு பிறகு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு கையெழுத்து போட்டு உள்ளார். இவ்வளவு காலதாமதம் செய்வதற்கு அவசியம் என்ன? இந்த தாமதம் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்டு உள்ள அநீதி“ என்றார்.
முன்னதாக கனிமொழி எம்.பி.யை மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் வரவேற்றனர்.
Related Tags :
Next Story