16-ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு ராமநாதபுரத்தில் புதுப்பொலிவுடன் தயாராகும் பள்ளிகள்
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் முதல்-அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து வருகிற 16-ந் தேதி முதல் திறக்கப்பட உள்ளதால் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் அடுத்தகட்ட பொதுமுடக்க தளர்வு குறித்து அறிவித்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் சில தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் முதல்-அமைச்சரின் உத்தரவினால் வருகிற 16-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முதல்-அமைச்சரின் உத்தரவின்படி 16-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் நகரில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திறப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பள்ளியில் இருந்த குப்பைகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டதோடு பள்ளி கட்டிடம் முழுவதும் வெள்ளை அடிக்கப்பட்டு வண்ண வண்ண கலரில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
சமூக இடைவெளி
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜோவிக்டோரினா கூறியதாவது:- கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் முதல்-அமைச்சரின் உத்தரவின்படி வருகிற 16-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக பள்ளிகள் தூய்மைப்படுத்தி வெள்ளை அடித்து புதுப்பொலிவு பெறச்செய்துள்ளோம். பள்ளிகளில் மாணவிகளை சமூக இடைவெளியுடன் அமர வைத்து கல்வி கற்றுக்கொள்ளும் வகையில் இருக்கைகள் அதற்கேற்ப மாற்றியமைக்க உள்ளோம். பள்ளியில் முககவசம் அணிந்து கைகழுவி சுத்தம் சுகாதாரத்துடன் கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அதன்படி வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story