சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவது உறுதி அமைச்சர் பேச்சு
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவது உறுதி என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
போத்தனூர்,
அ.தி.மு.க. கோவை புறநகர் தெற்கு மாவட்டம், கோவை மாநகர் மாவட்டம், கோவை புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது.
சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், எட்டிமடை சண்முகம், வி.சி.ஆறுக்குட்டி, கஸ்தூரி வாசு, ஓ.கே.சின்னராஜ், சூலூர் வி.பி.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆதாரமற்ற புகார்
உதயநிதி ஸ்டாலின் பொய்யான, ஆதாரமற்ற புகார்களை கூறிவிட்டு சென்று உள்ளார். கோவை மாவட்டத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார். இந்த மாவட்டம் ஜெயலலிதாவின் கோட்டை. அவரால் ஒன்றும் செய்ய முடியாது.
கோவை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்து உள்ளோம். கோவையில் வாக்கு கேட்க தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை. அவர்கள் கோவை வளர்ச்சிக்காக எதுவும் செய்ய வில்லை.
அவதூறு பரப்புவது குறிக்கோள்
அ.தி.மு.க.வுக்குள் பிரச்சினை வரும் என்று மு.க.ஸ்டாலின் நினைத்தார். ஆனால் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தேர்தலுக்கு சில மாதங்கள்தான் உள்ளது. எனவே தொண்டர்கள் அனைவரும் பொதுமக்களை சந்தித்து அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும்.
தி.மு.க.வுக்கு அவதூறு பரப்புவதே குறிக்கோள். சூயஸ் குடிநீர் திட்டத்தை தவறாக சித்தரித்து வருகிறார்கள். தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாரதி என் மீது ஆதாரம் இல்லாமல் வழக்கு போட்டு உள்ளார். சரியான ஆதாரம் இருந்தால் நான் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். குறுக்கு வழியில் தி.மு.க. ஆட்சியை பிடிக்க வழியை தேடி வருகிறது.
முதல்-அமைச்சராவது உறுதி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் எளிமையானவர். தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொணறுப்பு ஏற்பது உறுதி. எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் என்ஜினீயர் சந்திரசேகர், முன்னாள் எம்.பி. தியாகராஜன், ஆவின் தலைவர் கே.பி.ராஜூ, அமுல் கந்தசாமி, மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ், குனியமுத்தூர் மதனகோபால், சுகுணாபுரம் செல்லப்பன், போத்தனூர் ரபீக், செட்டிப்பாளையம் கண்டியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story