23 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் மராட்டிய அரசு - 15 நிறுவனங்கள் இடையே ரூ.35 ஆயிரம் கோடி தொழில் முதலீடு - உத்தவ் தாக்கரே முன்னிலையில் ஒப்பந்தம்


23 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் மராட்டிய அரசு - 15 நிறுவனங்கள் இடையே ரூ.35 ஆயிரம் கோடி தொழில் முதலீடு - உத்தவ் தாக்கரே முன்னிலையில் ஒப்பந்தம்
x
தினத்தந்தி 3 Nov 2020 3:48 AM IST (Updated: 3 Nov 2020 3:48 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய அரசு, 15 நிறுவனங்கள் இடையே ரூ.35 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் 23 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மும்பை,

கொரோனா பிரச்சினை காரணமாக மாநில அரசு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.


இந்த நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடிவடிக்கைகளை மராட்டிய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தொழில் தொடங்க முதலீட்டாளர்களை ஈர்க்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் மும்பையில் நேற்று தொழில் முதலீடுகளை ஈர்க்கும் ‘மேக்னடிக் மஹராஸ்டிரா 2.0’ நிகழ்ச்சி நடந்தது. விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய், இணை மந்திரி அதீதி தட்காரே உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் 15 தனியார் நிறுவனங்கள், மாநில தொழில் துறை மேம்பாட்டு கழகம் இடையே ரூ.34 ஆயிரத்து 850 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் மாநிலத்தில் 23 ஆயிரத்து 182 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசும்போது இந்த ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மாநிலத்துக்கு முதலீடு பெறப்படும் என்றார். மேலும் அவர் பேசியதாவது:-

உங்களின் (மாநில தொழில்துறை) சிறந்த பணிக்காக பாராட்டுகிறேன். ஆனால் உங்களின் வேலை தொடக்கம் தான். இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது. இந்த ஆண்டு நாம் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க வேண்டி உள்ளது. அதை நமது தொழில் துறை சாதித்து காட்டும் என நான் நம்புகிறேன்.

கடந்த ஜூன் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்த 60 சதவீத நிறுவனங்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்குவதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. மராட்டியம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை, நீதி, நிலைத்தன்மையை வழங்கும். மாநில தொழில் துறையின் கடின உழைப்பு மற்றும் அவர்கள் மீது உள்ள நம்பிக்கையால் தான் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது.

உலக தலைவர்கள் கொரோனா பிரச்சினையில் வாழ்க்கை, பொருளாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் எதை தேர்வு செய்வது என்ற கடுமையான சூழலில் உள்ளனர். ஆனால் இன்று நாம் உலகில் உள்ள 15 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளோம். மராட்டியம் இந்த கடின காலத்தில் இருந்து பலத்துடன் எழுந்து வரும் என தாழ்மையுடன் தெரிவித்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story