செங்கல்பட்டு அருகே லாரி கவிழ்ந்து விபத்து; தக்காளிகள் சாலையில் உருண்டோடின பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்
காஞ்சீபுரம்-செங்கல்பட்டு சாலையில் ஆந்திராவில் இருந்து வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 600 பெட்டிகளில் இருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள தக்காளிகள் சாலையில் உருண்டோடியது. இதை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட காஞ்சீபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையில் ஆந்திராவில் இருந்து செங்கல்பட்டு மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்காக காய்கறி மற்றும் தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் அப்பகுதியில் வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி நிலைத்தடுமாறி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் ஏற்றி வந்த 600 தக்காளி பெட்டிகள் சாலையில் விழுந்து உருண்டோடியது. இதனால் செங்கல்பட்டு-காஞ்சீபுரம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தக்காளியை அள்ளிச்சென்றனர்
அப்போது சாலையில் தக்காளி குவியலாக கொட்டி கிடப்பதை கண்ட பாலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து, தக்காளியை சிறிய பைகளிலும், கோணிப்பைகளிலும் மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றனர்.
பொதுமக்கள் சிலர் தக்காளி களை தண்ணீர் குடம் ஆகியவற்றில் அள்ளிச் சென்றதை காணமுடிந்தது. ஒரு சிலர் கவிழ்ந்த லாரியில் இருந்து கொட்டிய டீசலையும் திருடி சென்றனர். இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார், விரைந்து வந்து கிரேன் எந்திரத்தின் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.
இது குறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆந்திராவில் இருந்து வந்து கவிழ்ந்த லாரியில் இருந்து விழுந்து வீணான தக்காளி பழங்களின் மதிப்பு சுமார் ரூ.2½ லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story