ரூ.10 கோடி மோசடி புகார்: நெல்லையில் நிதி நிறுவன அதிபர் கைது
ரூ.10 கோடி மோசடி புகார் தொடர்பாக நெல்லையில் நிதி நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை,
நெல்லை சந்திப்பு பாலபாக்யா நகரை சேர்ந்தவர் எடிசன் (வயது 54). இவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், ‘பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் இயங்கி வரும் நிதி நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்யப்படும் பணத்துக்கு, பங்கு சந்தையில் முதலீடு செய்து கூடுதல் பணம் பெற்றுத்தருவோம் என அறிவித்தது. இதை நம்பி என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பணம் ரூ.10 கோடியை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால் குறிப்பிட்டபடி பணத்தை திருப்பி தரவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.
நிதி நிறுவன அதிபர் கைது
இதுகுறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை வேம்பார் நகரை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் மயில்வாகனன் (38) என்பவரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மயில்வாகனத்தின் தாயார் உமா பார்வதி, மைத்துனர் சிவசுந்தர் (42) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story