தர்மபுரி அருகே குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகள் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
தர்மபுரி அருகே குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். தர்மபுரி அருகே உள்ள நாகரசம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாகரசம்பட்டி கிராமத்திற்கு வெளியே பாப்பன் குட்டையில் செயல்பட்டு வந்த மதுக்கடையை தற்போது குடியிருப்பு பகுதிக்கு இடமாற்றம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு இடமாற்றம் செய்தால் அருகே உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ- மாணவிகள், பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். மது குடிப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களை பாதிக்கும் வகையில் மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கூடாது. இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
இலவச வீட்டுமனை
அதியமான்கோட்டை வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் ஏற்கனவே ஒரு மதுக்கடை உள்ளது. 2-வதாக மற்றொரு மதுக்கடையை தற்போது திறந்து உள்ளனர். 350 குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கோரி இருந்தனர்.
கடத்தூர் ரத்தினம் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
மொரப்பூர் அருகே உள்ள ஓபுளி நாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் சொந்த இடம் மற்றும் வீடு இல்லாத ஏழை, எளிய 50 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
Related Tags :
Next Story