முககவசம் அணியாமல் முரண்டுபிடித்த முதியவர் அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவு


முககவசம் அணியாமல் முரண்டுபிடித்த முதியவர் அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 3 Nov 2020 10:49 AM IST (Updated: 3 Nov 2020 10:49 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முககவசம் அணியமாட்டேன் என்று முரண்டு பிடித்த முதியவருக்கு அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள விரதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி (வயது70) . இவர் அடிக்கடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து வித்தியாசமான மனுக்களை அளித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். கடந்த ஆண்டு டென்னிஸ் வீராங்கனை பி.வி.சிந்துவை கடத்தி வந்து திருமணம் செய்யப்போவதாக மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில் இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு டிப்-டாப் உடை அணிந்து வந்தார்.

கலெக்டர் அருகில் வந்ததும் முககவசம் அணியாமல் மலைச்சாமி வந்ததை கவனித்த கலெக்டர் வீரராகவராவ் முககவசம் அணியுமாறு கூறினார்.

ஆனால், அதனை பொருட்படுத்தாமல் முககவசம் அணியமாட்டேன் என்று மலைச்சாமி அடம்பிடித்தார். இதனை கண்ட கலெக்டர் கேணிக்கரை போலீசாரை அழைத்து முககவசம் அணியாமல் வந்ததற்காக அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அபராதம்

இதனை தொடர்ந்து கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் மலைச்சாமியை அழைத்து சென்று முககவசம் வழங்கி அதனை அணியுமாறு கூறினர். போலீசாரிடமும் முககவசம் அணியமாட்டேன் என்று அடம்பிடித்ததால் போலீசார் பத்திரமாக அழைத்து சென்று அறிவுரை கூறி அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபோன்று ஏதாவது ஒரு காரணத்தை கூறி மனு எழுதி கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அனைவருக்கும் தொல்லை கொடுத்து வரும் மலைச்சாமி மீது மருத்துவ துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story