4 வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
4 வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய துணை தலைவர் பொன்ராஜ் தலைமையில் விவசாயிகள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, அவர்களை நுழைவு வாயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது, திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழிச்சாலை பணிக்காக ஒட்டன்சத்திரம் முதல் மடத்துக்குளம் வரை உள்ள விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்திவிட்டு அதற்கு இழப்பீட்டு தொகையாக குறைந்த தொகையே பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 4 வழிச்சாலை பணிக்காக விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு 2013-ம் ஆண்டு நில எடுப்பு சட்டத்தின்படி இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மேலும் ஏற்கனவே இழப்பீட்டு தொகை பெற்றவர்களுக்கும் இந்த சட்டத்தின்படி கூடுதல் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். எனவே முதல்-அமைச்சர் வாக்குறுதிப்படி ஏற்கனவே குறைவான இழப்பீட்டு தொகை பெற்றவர்களுக்கும், இனிமேல் பெற உள்ளவர்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
காத்திருப்பு போராட்டம்
மேலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்று கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறிய விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பகல் 11.30 மணிக்கு மேல் தொடங்கிய போராட்டம் மதியம் 2 மணி வரை நீடித்தது. பின்னர் விவசாயிகளிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக போராட்டத்தில் விவசாயிகள் சங்க மத்திய குழு உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story