திருச்சி மார்க்கெட்டுக்கு எகிப்து வெங்காயம் 25 டன் வந்தது


திருச்சி மார்க்கெட்டுக்கு எகிப்து வெங்காயம் 25 டன் வந்தது
x
தினத்தந்தி 4 Nov 2020 7:11 AM IST (Updated: 4 Nov 2020 7:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மார்க்கெட்டுக்கு எகிப்து வெங்காயம் 25 டன் வந்தது.

திருச்சி, 

திருச்சி மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரிய வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சாம்பார் வெங்காயம் என்றழைக்கப்படும் சின்ன வெங்காயத்திற்கு நிகரான விலையில் பெரிய வெங்காயமும் கிலோ ரூ.80 முதல் ரூ.100, ரூ.120 என தரம் வாரியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி வெங்காய மண்டிக்கு மராட்டிய மாநிலம், கர்நாடக மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் லாரிகளில் வருவது வழக்கம். தற்போது அங்கு பெய்து வரும் மழை காரணமாக வெங்காய ஏற்றுமதி வெகுவாக குறைந்து விட்டது. அதிக விலைக்கு வெங்காயம் விற்பனை ஆனாலும், வரத்தும் குறைந்து விட்டது.

25 டன் எகிப்து வெங்காயம் வருகை

விலையேற்றம், தட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 29-ந்தேதி 3 டன் எகிப்து வெங்காயம் திருச்சி வெங்காய மண்டிக்கு வந்தது.

இந்த நிலையில் எகிப்து நாட்டில் இருந்து தருவிக்கப்பட்டு மும்பை வந்தடைந்த பெரிய வெங்காயம், திருச்சி வியாபாரிகள் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் 25 டன் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது நேற்று திருச்சிக்கு வந்தடைந்தது.

விலை நிர்ணயம்

நமது நாட்டு பெரிய வெங்காயம் நல்ல காரத்துடன் இருக்கும். அதே வேளையில் எகிப்து வெங்காயத்தில் காரம் அதிகமாக இருக்காது என்று வியாபாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.

எகிப்து வெங்காயத்தில் நிறம் மற்றும் முளைப்புத்திறன் அதிகமாக இருப்பதால் அவற்றை அதிக நாட்கள் கையிருப்பில் வைத்து கொள்ள முடியாது. எனவே, உடனடியாக விற்பனை செய்யும் வகையில் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பதற்கு வியாபாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Next Story