திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு பிரதமர் உருவப்படத்தை பொருத்த ஆணியுடன் திரண்டு வந்த பா.ஜ.க.வினரால் பரபரப்பு
திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு பிரதமர் மோடி உருவப்படத்தை பொருத்த ஆணியுடன் திரண்டு வந்த பா.ஜனதாவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரத பிரதமரின் உருவப்படம் வைக்கவேண்டும் என்று 1978-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் பட்டியல் இன அணி சார்பில் கடந்த 29-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது 100 மணி நேரத்திற்குள் மோடி உருவப்படம் வைக்கப்பட வில்லை என்றால், பாரதீய ஜனதா கட்சி சார்பில் வைக்கப்படும் என கெடு விதிக்கப்பட்டது. அந்த கெடு நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு பாரதீய ஜனதா கட்சியின் பட்டியல் இன அணி மாநில துணைத்தலைவர் பாண்டியன் தலைமையில் திருச்சி புறநகர் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் மோடி உருவப்படத்தை பொருத்தும் நோக்கில் ஆணியுடன் கோஷம் எழுப்பியவாறு வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டருடன் சந்திப்பு
அங்கு பாதுகாப்புக்கு போதிய போலீசார் இல்லாததால் அனைவரும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரித்தா அறைக்கு சென்றனர். அவரிடம், மோடி உருவப்படம் பொருத்த நாங்கள் ஆணியுடன் வந்துள்ளோம். அதை மாட்டி விட்டு செல்கிறோம் என்றனர். அதற்கு ஜெயப்பிரித்தா, சில நிமிடங்களில் கலெக்டர் வந்துவிடுவார். அவரிடம் முறையிடுங்கள் எனக்கூறி அனுப்பி வைத்தார்.
அதேபோல சிறிது நேரத்தில் கலெக்டர் எஸ்.சிவராசு அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் பாரதீய ஜனதா நிர்வாகிகள் உருவப்படத்தை பொருத்த சொல்லி வற்புறுத்தினர். அப்போது கலெக்டர், பிரதமர் மோடி உருவப்படத்தை வாங்கி வைத்துக்கொண்டு, ‘இது தொடர்பாக தலைமை செயலாளரிடம் கலந்து பேசி உத்தரவு வந்ததும் அனைத்து அலுவலகத்திலும் பிரதமர் உருவப்படம் வைக்க நடவடிக்கை எடுக்கிறோம்‘ எனக்கூறி அனுப்பி வைத்தார்.
முற்றுகை போராட்டம்
பின்னர் வெளியே வந்ததும் மாநில துணைத்தலைவர் பாண்டியன் கூறுகையில், ‘பிரதமர் மோடி உருவப்படம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழகத்தில் பொருத்தப்பட வில்லை என்றால், அடுத்த கட்டமாக அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படம் அருகில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. அந்த படம் வைப்பதற்கு எவ்வித அரசு ஆணையும் இல்லை. இதை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். இதை சாதாரணமாக விடப்போவதில்லை’ என்றார்.
Related Tags :
Next Story