பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி வாய்க்காலில் இறங்கி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி வாய்க்காலில் இறங்கி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2020 9:04 AM IST (Updated: 4 Nov 2020 9:04 AM IST)
t-max-icont-min-icon

பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி வாய்க்காலில் இறங்கி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்மாப்பேட்டை,

தஞ்சை மாவட்டம் வடவாற்றில் தற்போது முறை வைத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அம்மாப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தூர் பாசன வாய்க்காலில் பாசனத்துக்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை உள்ளது. இதனால் வடக்கு தோப்பு, புளியக்குடி ஆகிய கிராமங்களில் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாய நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் புத்தூர் பாசன வாய்க்காலில் பாசனத்துக்கு தேவையான அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் புத்தூர் பாசன வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிர்வாகிகள்

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உத்திராபதி, ராமலிங்கம், ராஜமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாய்க்காலில் இறங்கி கையில் கட்சி கொடியை ஏந்தி கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Next Story