சேலத்தில், குடிநீர் கேட்டு வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
சேலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
சேலம்,
சேலம் மாநகராட்சி 37-வது வார்டுக்கு உட்பட்ட தாதம்பட்டி காந்திநகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லை என்று அங்கு வசிக்கும் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வசதி செய்து தரக்கோரி தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி நேற்று திடீரென போராட்டம் நடத்தினர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
தாதம்பட்டி காந்திநகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் வசித்து வருகின்றோம். இந்த நிலையில் எங்கள் பகுதிக்கு குடிநீர் போதிய அளவு வருவதில்லை. வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதுவும் சிறிது நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.
பேச்சுவார்த்தை
மேலும் சிறிது நேரம் மழை பெய்தாலே எங்கள் பகுதியில் ஆங்காங்கே மழை நீர் தேங்கிவிடும். எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தர வேண்டும். எங்கள் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே குடிநீர் வசதி மற்றும் சாக்கடை கால்வாய் வசதி செய்து தர வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி கூறினர்.
வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் நடத்திய இந்த திடீர் போராட்டம் காரணமாக நேற்று அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story