25 சதவீத தீபாவளி போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்


25 சதவீத தீபாவளி போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2020 2:30 PM IST (Updated: 4 Nov 2020 2:30 PM IST)
t-max-icont-min-icon

25 சதவீத தீபாவளி போனஸ் கேட்டு, திண்டுக்கல்லில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மேலும் தமிழகத்தில் 10 சதவீத போனஸ் வழங்கும் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் நேற்று தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பணிமனைகளின் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கிடையே திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, 25 சதவீத தீபாவளி போனஸ் கேட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யூ. கிளை தலைவர் ராஜசேகரன், மத்திய சங்க உதவி தலைவர் ஆனந்தராஜ், உதவி செயலாளர் வாசுதேவன், செயற்குழு உறுப்பினர் ரமேஷ்குமார், தொ.மு.ச. துணை பொதுச்செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் 3 பேர் உடல் முழுவதும் பட்டை நாமம் அணிந்து, கையில் தட்டை ஏந்தியபடி பங்கேற்றனர். அப்போது தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும். அதற்காக தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Next Story