தனியார் மயமாக்கலை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது - கனிமொழி எம்.பி. பேச்சு
தனியார் மயமாக்கலை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு மின் வாரிய தலைவர் தொழிற்சங்கங்களோடு பேசுவதோ, தொழிற்சங்க தலைவர்களை சந்திப்பதோ கிடையாது, இந்த நிலை மாற்றப்பட வேண்டும், துணை மின் நிலையங்களை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கக்கூடாது, துணை மின் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பாமல் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்றவர்களை கொண்டு நிரப்புவதை கைவிடவேண்டும், முத்தரப்பு ஒப்பந்தம் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தொழிலாளர், பொறியாளர், அலுவலர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும், அதற்கான பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், துப்புரவு பணியாளர் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு சங்க செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்:-
கண்துடைப்பிற்கான காரணங்களை சொல்லி, அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் செயலில் மத்திய-மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. தி.மு.க தனியார் மயமாக்கலை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்காமல் செயல்படுவது ஏற்றுகொள்ள முடியாது. நேரடியாக தனியாருக்கு கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்கலை எடுத்து இருக்கின்றனர். இதனை கண்டிக்கிறோம். தனியார் மயமாக்கலை ஏற்று கொள்ள மாட்டோம்’ என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பேச்சிமுத்து, பொருளாளர் லிங்கராஜ், சி.ஐ.டி.யு. ராமையா, எச்.எம்.எஸ். சங்க செயலாளர் சுப்பிரமணியன், மின்வாரிய பொறியாளர் சங்க அமைப்பு செயலாளர் ரெமிங்டன் வி.ராயர், மின் ஊழியர் காங்கிரஸ் செயலாளர் மாதவன், கணக்காயர் களத் தொழிலாளர் சங்க செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story