பள்ளிகளை இப்போது திறக்க வேண்டாம்: இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எடியூரப்பா மாற்றப்படுவார் - சித்தராமையா பரபரப்பு பேட்டி


பள்ளிகளை இப்போது திறக்க வேண்டாம்: இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எடியூரப்பா மாற்றப்படுவார் - சித்தராமையா பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 5 Nov 2020 3:30 AM IST (Updated: 5 Nov 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளை இப்போது திறக்க வேண்டாம் எனவும், இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எடியூரப்பா மாற்றப்படுவார் என்றும் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மைசூரு, 

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆர்.ஆர்.நகர் மற்றும் சிராவில் காங்கிரஸ் வெற்றி பெறும். சிராவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது காங்கிரசுக்கு எதிராக அவபிரசாரம் நடந்தது. அதனால் அங்கு எங்கள் கட்சி தோல்வியை தழுவ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. கர்நாடகத்தில் இந்த ஆண்டு பள்ளிகளை திறக்க வேண்டாம். இது அரசுக்கு எனது தனிப்பட்ட ஆலோசனை. தேர்வு நடத்தாமல் அனைத்து குழந்தைகளுக்கும் தேர்ச்சி வழங்கி அடுத்த வகுப்புக்கு அனுப்ப வேண்டும்.

கொரோனா முழுமையாக வெளியேறிய பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும். அவசரகதியில் பள்ளிகளை திறப்பது சரியல்ல. அமெரிக்காவில் மோடியின் பெயர் எடுபடாது. அங்கு மக்கள் மோடியின் முகத்தை பார்த்து வாக்களிக்கிறார்களா?. பிரசாரத்தில் மோடியின் பெயரை பயன்படுத்தி டிரம்ப் ஓட்டு கேட்டார். அமெரிக்க தேர்தலே வேறு விதம். அங்கு வாழும் இந்தியர்கள் கூட மோடியின் முகத்தை பார்த்து வாக்களிக்க மாட்டார்கள்.

இந்தியாவில் மோடிக்கு எதிராக மக்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள். நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மோடி நாசப்படுத்திவிட்டார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் இளைஞர்கள் மோடிக்கு எதிராக வெகுண்டு எழத்தொடங்கியுள்ளனர். பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீது வெங்காயத்தை வீசி அங்குள்ள மக்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் மோடியின் பிரசாரம் எடுபடாது.

இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்படுவார். டெல்லியில் உள்ள ஒருவர் எனக்கு இந்த தகவலை தெரிவித்தார். அவர் மீது நான் ஊழல் புகாரை கூறினேன். அவரது மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story