மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டி? சுவரொட்டிகளால் பரபரப்பு


மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டி? சுவரொட்டிகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Nov 2020 1:13 AM GMT (Updated: 5 Nov 2020 1:13 AM GMT)

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு கோட்டைக்கு செல்வார் என பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி, 

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முதலாக தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார். தான் போட்டியிடவில்லை என்றாலும் தனது கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கணிசமான அளவு வாக்குகளை பெற்றனர்.

இந்நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்தே போட்டியிடும். மக்களுடன் தான் கூட்டணி என்று கமல்ஹாசன் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவித்தார். அவர் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு பிரசார வாகனம் தயாராக இருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

சட்டமன்ற தேர்தலில்திருச்சியில் போட்டி?

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட உள்ள தொகுதியின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் தேர்தலை சந்திப்பதற்காக கமல்ஹாசனும் அவரது கட்சியின் நிர்வாகிகளும் தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் வருகிற 7-ந் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் ஆகும். பிறந்த நாளையொட்டி கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து திருச்சி நகரின் பல்வேறு இடங்களிலும் சுவர்களில் மிக பிரம்மாண்டமான அளவுள்ள சுவரொட்டிகள் அவரது கட்சி நிர்வாகிகளால் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளில் ‘திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அரசாள போகும் நம்ம(வர்) முதல்வர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்‘ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

பிரமுகர்கள் கலக்கம்

இந்த சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன என்று சொன்னால் மிகையாகாது. திருச்சி கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தற்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் திருச்சி பகுதியை சேர்ந்த தி.மு.க. முக்கிய நிர்வாகி ஒருவர் நிற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இந்த சூழலில் கமல்ஹாசன் திருச்சியில் போட்டியிட இருப்பதாக இடம்பெற்றுள்ள வாசகங்கள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பையும், கட்சி பிரமுகர்கள் மத்தியில் கடுமையான ஒரு கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அனுமதி பெறப்பட்டதா?

கமல்ஹாசனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி என்றாலும் அவர் வளர்ந்தது, கலையுலகில் சேர்ந்து நட்சத்திர நடிகர் ஆகியது, அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது சென்னை நகரம் தான். தலைசிறந்த ஒரு நடிகராக உள்ள அவருக்கு தனது சொந்த ஊரில் தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது.

இருந்தாலும், அவர் தலைநகர் சென்னையில் கூட ஏதாவது ஒரு தொகுதியை தேர்வு செய்யலாம். ஆனால் திருச்சி கிழக்கு தொகுதியை குறிப்பிட்டு அவரது நிர்வாகிகள் ஒட்டியுள்ள இந்த சுவரொட்டிகள் அவரது அனுமதி பெற்று தான் ஒட்டப்பட்டதா? அல்லது கட்சி நிர்வாகிகள் ஆர்வ மிகுதியினால் இதுபோன்ற வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டினார்களா? என தெரியவில்லை.

வெற்றி பெறுவார்

இதுதொடர்பாக அவரது கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில் ‘எங்கள் தலைவர் தமிழகத்தில் எந்த ஒரு தொகுதியில் நின்றாலும் வெற்றி வாகை சூடுவார். ஆனால் தமிழகத்தின் மைய பகுதியான மலைக்கோட்டை நகரம் திருச்சி கிழக்கு தொகுதியில் தான் அமைந்துள்ளது. இது சாதி, மதம், சமயம் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட சமய சார்பற்ற ஒரு தொகுதியாகும். அதனால் தான் இந்த தொகுதியில் அவரை வெற்றி பெறச் செய்து கோட்டைக்கு அனுப்பவும், அதற்காக உழைக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்‘ என்றார்.

Next Story