நிரந்தர கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நிரந்தர கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2020 7:37 AM IST (Updated: 5 Nov 2020 7:37 AM IST)
t-max-icont-min-icon

நிரந்தர கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வலியுறுத்தி திருமலைராயன்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால், 

காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினம் வருவாய் கிராமத்துக்கு நிரந்தர கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரை நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமலைராயன்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், மாவட்டக்குழு உறுப்பினர் கலியபெருமாள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள் தங்களுக்குரிய கல்வி மற்றும் இதர சான்றுகளை பெறுவதில் சிரமம் உள்ளதால், வருவாய்த்துறையின் ஆன்லைன் மூலம் சான்று வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். வருவாய்த்துறை அலுவலகத்துக்கு சான்றிதழ்கள் வாங்க செல்லும் பயனாளிகளை அலைய விடும் அலட்சிய போக்கை கைவிட வேண்டும். திருமலைராயன்பட்டினம் வருவாய் கிராமத்துக்கு நிரந்தர கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளரை நியமிக்க வேண்டும்.

கொரோனா நிவாரண நிதியாக வருமான வரி செலுத்தாத ஏழைகளுக்கு, மத்திய அரசு ரூ.7 ஆயிரமும், மாநில அரசு ரூ.5 ஆயிரமும் உடனடியாக வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் முழுமையாக பணி வழங்கி, உரிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கு ஊதி, தப்படித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், ஆரோக்கியதாஸ், ஜெகன்தாஸ், ராமர், திவ்யநாதன், தமிழ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story