குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் வருகை தொடர்பாக அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
குமரி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதையொட்டி விழா ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
நாகர்கோவில்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து பின்னர் அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் வர உள்ளார். இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள விழாவில் பங்கேற்று பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். முடிவடைந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் வருவாய் கூட்டரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று குமரி மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிகிறார்.
ஆலோசனை கூட்டம்
முதல்-அமைச்சர் வருகையையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழா நடைபெறும் இடத்தில் ஏற்கனவே பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், சப்-கலெக்டர் சரண்யா அரி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, கோட்டாட்சியர் மயில் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கலெக்டர் ஆய்வு
கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்துக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பேசப்பட்டது. இதனையடுத்து விழா நடைபெற உள்ள இடத்தை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழா நடக்கும் இடத்துக்கு வர ஒரு நுழைவு வாயில் மட்டுமே உள்ளது. இதனால் நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே கூடுதலாக ஒரு நுழைவு வாயில் ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கலெக்டர் அரவிந்த் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், கோட்டாட்சியர் மயில் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story