‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: வெட்டுக்கிளிகள் நாசப்படுத்திய சோளப்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: வெட்டுக்கிளிகள் நாசப்படுத்திய சோளப்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 5 Nov 2020 10:16 AM GMT (Updated: 5 Nov 2020 10:16 AM GMT)

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வெட்டுக்கிளிகள் நாசப்படுத்திய சோளப்பயிர்களை வேளாண்மை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளதால், மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக பயிரிடப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடி, சீலப்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சோளம் சாகுபடி செய்துள்ளனர்.

அதில் ஒருசில பகுதிகளில் பயிரிட்டுள்ள சோளம் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் சோளம் பாதி விளைச்சலில் உள்ளது. மேலும் பருவமழை குறைவாக பெய்ததால் சோளம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரத்துக்கு முன்பு முள்ளிப்பாடி பகுதிக்கு பச்சை நிற வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக படையெடுத்து வந்தன. மேலும் அந்த வெட்டுக்கிளிகள் சோள பயிரில் தண்டு பகுதியை மட்டும் விட்டுவிட்டு, தோகையை முழுமையாக தின்று வருகின்றன. இதனால் சோள பயிர்களில் சத்து குறைபாடு ஏற்பட்டு, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வெட்டுக்கிளிகள் சோள பயிரின் தோகையை முழுமையாக தின்றுவிடுவதால், அதை மாட்டுத்தீவனமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை தீவனத்துக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்கு விவசாயிகள் முயன்றும் முடியவில்லை. இதனால் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சோள பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து விட்டன. இதுபற்றிய செய்தி படத்துடன் ‘தினத்தந்தி’ நாளிதழில் நேற்று வெளியானது.

இதன் எதிரொலியாக காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தின் பூச்சியல் தொழில்நுட்ப வல்லுனர் ஷாகின்தாஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிபாரதி, வேளாண்மை உதவி இயக்குனர்கள் நாகேந்திரன், உமா, வேளாண்மை அலுவலர் ராமசாமி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் செந்தில், நாகராஜன், அண்ணாத்துரை ஆகியோர் நேற்று வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட முள்ளிப்பாடி ஆரோக்கியசாமிநகருக்கு வந்தனர்.

பின்னர் அங்கு வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட சோள பயிர்கள், அவற்றில் அமர்ந்திருந்த பச்சைநிற வெட்டுக்கிளிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சில வெட்டுக்கிளிகளை பாலித்தீன் பையில் சேகரித்தனர். அதை ஆய்வுக்கு அனுப்ப இருப்பதாக அதிகாரிகள் கூறினர். அதேபோல் வெட்டுக்கிளிகளை அழிப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

இதுகுறித்து பூச்சியல் தொழில்நுட்ப வல்லுனர் ஷாகின்தாஜ் கூறுகையில், இவை வடமாநிலங்களில் இருக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை. ஏற்கனவே இங்குள்ள சாதாரண வெட்டுக்கிளிகள் தான். இவை சோளம், தீவள சோளம் ஆகிய பயிர்களில் பசுமையாக இருக்கும் தோகையை மட்டுமே இரையாக தின்னும். ஆனால், பாலைவன வெட்டுக்கிளிகள் அனைத்து பயிர்களையும் தின்று விடும்.

இங்குள்ள சாதாரண வெட்டுக்கிளிகள் 100 முட்டைகள் வரை இடும். அவை பூமியில் அப்படியே கிடக்கும். அதை அழிக்க நிலத்தை ஆழமாக உழுது வேப்பம்புண்ணாக்கு, மெட்டாரைசியம் மருந்தை எருவுடன் இடவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மீண்டும் வெட்டுக்கிளிகள் உருவாகிவிடும். அதேபோல் வரப்பு பகுதியில் இருக்கும் களைகள் மீதும் மருந்து தெளிக்கலாம். அதன்மூலம் வெட்டுக்கிளிகளை முழுமையாக கட்டுப்படுத்தலாம், என்றார்.

Next Story