சங்கராபுரம் அருகே பிளஸ்-1 மாணவி கடத்தல் மினி லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது


சங்கராபுரம் அருகே பிளஸ்-1 மாணவி கடத்தல் மினி லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 5 Nov 2020 6:35 PM IST (Updated: 5 Nov 2020 6:35 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்ற மினி லாரி டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, நாவகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் சங்கர்(வயது 34). மினி லாரி டிரைவரான இவருக்கு சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலத்தில் வேலை பார்த்து வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக அவ்வப்போது வந்து சென்றபோது அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 படித்துவரும் 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று மாணவியை சங்கர் கடத்தி சென்று விட்டதாக அவரது தாயார் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார்கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து மாணவியுடன் மாயமான சங்கரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், சவுக்கத்அலி மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது தேவபாண்டலம் பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் மேல் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மாணவியை கடத்திசென்றதாக தேடப்பட்டு வரும் சங்கர் என்பதும், திருமணாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும்இவர் தனது திருமணத்தை மறைத்து மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சங்கரை கைது செய்த போலீசார், இவர் கொடுத்த தகவலின் பேரில் மாணவியை மீட்டனர். மாணவியை கடத்திச் சென்ற மினி லாரி டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story