முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி சாலையை சுத்தம் செய்யும் பணி


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி சாலையை சுத்தம் செய்யும் பணி
x
தினத்தந்தி 5 Nov 2020 2:59 PM GMT (Updated: 5 Nov 2020 2:59 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஊட்டியில் சாலையை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

ஊட்டி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்துகிறார். அத்துடன் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கிறார். ஊட்டிக்கு முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி ஊட்டியை அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஊட்டி சேரிங்கிராசில் இருந்து கலெக்டர் அலுவலக சந்திப்பு வரை உள்ள நடைபாதை சாலையில் இருந்து பள்ளமாக காணப்பட்டது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபாதை சீரமைக்கப்பட்டு கான்கிரீட் போட்டு உயர்த்தப்பட்டது. மழைநீர் செல்லும் வகையில் நடைபாதையின் அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை ஓரத்தில் கம்பிகள் பொருத்தப்பட்டு உள்ளது.

சாலையோர தடுப்புச்சுவரில் நீலகிரியில் வாழ்ந்து வரும் வனவிலங்குகள், பசுமையை பிரதிபலிக்கும் வகையில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. சேரிங்கிராஸ், மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா படகு இல்லம் ஆகிய சுற்றுலாத் தலங்களை குறிக்கும் வகையில், அதன் படங்களுடன் ஒளிரும் தகவல் பலகைகள் சாலையோரங்களில் பொருத்தப்பட்டு உள்ளது.

அங்கிருந்து சுற்றுலா தலங்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கிலோ மீட்டர் விவரம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து முதல்-அமைச்சர் சாலை வழியாக ஊட்டிக்கு வருவதால் சாலையோரத்தில் உள்ள செடி, கொடிகள் வெட்டி அகற்றி சுத்தம் செய்யப்படுகிறது.

தடுப்புச்சுவர்களில் வெள்ளை அடிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. ஊட்டி நகராட்சியில் சாலையோரங்களில் உள்ள பூங்காக்கள் பராமரிப்பின்றி களையிழந்து காணப்பட்டது. முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரித்து புதுப்பொலிவாக மாற்றி உள்ளது. மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் பூங்கா செயற்கை நீர்வீழ்ச்சி சீரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது.

கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டேவிஸ் பூங்கா புதர்கள் அகற்றப்பட்டு நடைபாதை நீர்வீழ்ச்சி மற்றும் நுழைவாயில் சீரமைக்கப்பட்டு வருகிறது. முதல்- அமைச்சர் வருகையை முன்னிட்டு தமிழகம் சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டு உள்ளன. ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையை அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

Next Story