மறைவுக்கு முன்பு தி.மு.க.வின் வெற்றியை பார்க்க நினைத்தார்: ‘கருணாநிதிக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன்’ - காணொலி காட்சி வழியாக பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தன்னுடைய மறைவுக்கு முன்பு தி.மு.க.வின் வெற்றியை கருணாநிதி பார்க்க விரும்பினார் என்றும், அவருக்கு கொடுத்த வாக்குறுதியை தான் நிறைவேற்றுவேன் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தூத்துக்குடி,
தி.மு.க. சார்பில் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் காணொலி காட்சி வழியாக பங்கேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அதன்படி, தூத்துக்குடியில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி வழியாக மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்ட மண் என்பது சாதாரண மண் அல்ல. வீரம் விளைந்த மண். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கோட்டை அமைந்திருக்கிறது என்றால் அதனை அமைத்தவர் கருணாநிதி. கட்டபொம்மன் பிறந்தநாளை ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டவர் கருணாநிதி. அரசு பதிவேட்டில் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரை பொறித்தவர் கருணாநிதி. கட்டபொம்மன் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் 1952-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதனை 1969-ம் ஆண்டு திரும்ப வழங்கியவர் கருணாநிதி.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் என்றால் எதை சொல்வது?. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொலை செய்ததை சொல்வதா?. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தையையும் மகனையும் அடித்தே கொன்ற அநியாயத்தைச் சொல்லவா?. துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேரை கொலை செய்த கூட்டத்துக்கு நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டாமா?.
அக்டோபர் 13-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் வருவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் தாயார் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அக்டோபர் 29-ந்தேதி முதல்-அமைச்சர் தூத்துக்குடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுவும் ரத்து செய்யப்பட்டது. அடுத்து புதிய தேதி குறித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஏன் தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சரால் வரமுடியவில்லை? என்ன தயக்கம்?.
விவசாயிகளுக்கு, நெசவாளருக்கு, வியாபாரிகளுக்கு துரோகம். மீனவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர்க்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு துரோகம், பட்டியலின மக்களுக்கு துரோகம், சிறுபான்மையினர்க்கு துரோகம் என்று துரோக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி ஆகிவிட்டார். இந்த துரோக கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போர் தான் இந்த தேர்தல். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வென்றோம். அதை போலத்தான் ஒட்டுமொத்தமான, முழுமையான வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வழங்க வேண்டும். முழு வெற்றியை அடையும் போதுதான் முழு நன்மையும் மக்கள் பெற முடியும்.
நம்முடைய தலைவர் கருணாநிதி எல்லாவற்றிலும் நிறை வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் அடைந்த உயரத்தை இதுவரை எவரும் தொட்டதும் இல்லை. இனி தொடவும் முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். எந்த துறையை எடுத்தாலும் அவரே நம்பர் ஒன்னாக இருந்தார். எந்த கூட்டத்திலும் அவரே முதல் மனிதர். அத்தகைய தலைவருக்கு ஒரு குறை இருந்தது. அவர் நம்மை விட்டு பிரியும் போது அவர் முதல்-அமைச்சராக இல்லை. தி.மு.க. ஆட்சி மலர்ந்துவிட வேண்டும், அந்த வெற்றியை அவர் பார்த்துவிட வேண்டும் என்று நாம் நினைத்தோம். ஆனால் காலம் வேறு மாதிரியாக நினைத்துவிட்டது.
இயற்கையின் சதியை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் கருணாநிதிக்கு நான் கொடுத்த வாக்குறுதியாக தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும். இது ஒரு இலக்கு! தமிழகத்தை மீட்க வேண்டும். இது இரண்டாவது இலக்கு. கருணாநிதியின் கனவை நிறைவேற்ற அவரின் தொண்டர்களாகிய நம்மால் தான் முடியும். பணிமுடிப்போம்! தமிழகம் மீட்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story