தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்களின் சொந்த விவரங்களை வெளியிட்டது குறித்து விசாரணை ஐகோர்ட்டு உத்தரவு
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் வெளியிட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சகத்திற்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மும்பை ஐகோர்ட்டில் சாகித் கோகலே என்ற தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) சட்ட ஆர்வலர் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்றது தொடர்பாக எனது முகவரி, தொலைபேசி எண் ஆகியவை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டது. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை எனது தகவல் இணையதள பக்கத்தில் இருந்தது.
இது தொடர்பாக நான் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிய பிறகு தான் நீக்கப்பட்டது. எனது தகவல் வெளியிடப்பட்டதால் பலர் போன் செய்தும், குறுந்தகவல் அனுப்பியும் எனக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். எனவே மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் ரூ.50 லட்சம் இழப்பீடு தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
விசாரணைக்கு உத்தரவு
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிதின் ஜாம்தார், மிலிந்த் ஜாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. இதில் மனுவை விசாரித்த நீதிபதிகள் இணைதள பக்கத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்களின் சொந்த விவரங்கள் வெளியிடப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டனர்.
மேலும் விசாரணையை 3 மாதத்திற்குள் முடித்து அதுகுறித்த அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story