ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் கிடையாது அமைச்சர் பேட்டி


ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் கிடையாது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 6 Nov 2020 9:19 AM IST (Updated: 6 Nov 2020 9:19 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வரும் விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

வானூர், 

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க ரூ.19 கோடி செலவில் தூண்டில் வளைவு திட்டம் அமைக்க பூமிபூஜை நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, வானூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூண்டில் வளைவு திட்டத்துக்காக பூமிபூஜை செய்து பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார். பொம்மையார்பாளையம் கடற்கரையில் தூண்டில் வளைவு அமையும் இடத்தையும் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அருகதை இல்லை

கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமத்திற்கு தமிழக அரசு தூண்டில் வளைவு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது.

லாட்டரி சீட்டால் ஏழை, எளியவர்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தான் முதலில் லாட்டரி சீட்டுக்கு தடை விதித்தார். இதுதொடர்பாக தினந்தோறும் அறிக்கை விட்டு அரசியல் செய்யும் மு.க.ஸ்டாலினுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.

தற்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்வது குறித்து அரசு பரிசீலனையில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனை தெரிந்து வைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசி வருகிறார். மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செய்யும் விவகாரத்திலும் இதேபோல் தான் மு.க.ஸ்டாலின் செயல்பட்டார். இதில் பெயர் தட்டிச் செல்லலாம் என நினைத்து அவர் செயல்படுகிறார். இதுதொடர்பான எந்த அறிவிப்புக்கும் மு.க.ஸ்டாலினுக்கு உரிமை கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இயக்குனர் காத்தவராயன், வானூர் தாசில்தார் சங்கரலிங்கம், வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. ஜானகிராமன், வானூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன், தொள்ளமூர் கூட்டுறவு வங்கி தலைவர் டி.வி.குமார், கிளியனூர் கூட்டுறவு வங்கி தலைவர் பிரபு, வானூர் வீட்டு வசதி சங்க தலைவர் முருகன், கிளியனூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வக்கீல் சிவசுப்பிரமணியன், பாசறை ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story