தஞ்சையில் அரசு மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்


தஞ்சையில் அரசு மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
x

காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தஞ்சையில் அரசு மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை காந்திஜிசாலையில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, நிலஅளவை அமைச்சுப்பணி ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் முருகன், எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்க மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பேசினர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில், மக்கள் நல்வாழ்வு துறையில் காலியாக உள்ள 750-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். 110 தாலுகா மற்றும் தாலுகா அல்லாத மருத்துவமனைகளில் தலைமை மருந்தாளுனர் பணியிடம் உருவாக்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். கொரோனாவுக்கு உயிரிழந்த மருந்தாளுனர் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடுத்தொகையும், குடும்ப வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் ஹேமலதா முடித்து வைத்து பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Next Story