குமரியில் பரபரப்பு போலீஸ் வாகன சோதனையில் ரூ.35 லட்சம் சிக்கியது காரில் வந்தவர்களிடம் விசாரணை


குமரியில் பரபரப்பு போலீஸ் வாகன சோதனையில் ரூ.35 லட்சம் சிக்கியது காரில் வந்தவர்களிடம் விசாரணை
x
தினத்தந்தி 6 Nov 2020 11:16 AM IST (Updated: 6 Nov 2020 11:16 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் போலீஸ் வாகன சோதனையில் கட்டு, கட்டாக ரூ.35 லட்சம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பத்மநாபபுரம், 

குமரி மாவட்டம் மஞ்சாலுமூடு பகுதி வழியாக கேரளாவுக்கு 3 வாகனங்களில் ஹவாலா பணம் கடத்தப்பட உள்ளதாக தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர் தலைமையிலான போலீசார் மஞ்சாலுமூடு பகுதிக்கு விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர்.

அந்த காரில் பனச்சமூடு பகுதியை சேர்ந்த பலசரக்கு கடை வியாபாரி மற்றும் அவருடைய நண்பர் இருந்தார். பின்னர் போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அதில், கத்தை கத்தையாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகப்பட்ட போலீசார் உடனடியாக அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

பரபரப்பு தகவல்கள்

தொடர்ந்து காரில் இருந்த பணத்தை எண்ணியதில், மொத்தம் ரூ.35 லட்சம் இருந்தது. பிறகு, இந்த பணத்தை எங்கு கொண்டு செல்கிறீர்கள், பணம் எங்கிருந்து வந்தது? என போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பரபரப்பான தகவல்கள் வெளியானது. அதாவது, பனச்சமூடு பகுதியை சேர்ந்த வியாபாரிக்கும், அதே பகுதியை சேர்ந்த 40 வயது நபருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் வியாபாரி ரூ.6 லட்சத்தை பெற்று கொண்டு நிலத்தை 40 வயது நபருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த பணம், வியாபாரம் சம்பந்தமாக வைத்திருந்த ரூ.29 லட்சம் என ரூ.35 லட்சத்துடன் காரில் சென்ற போது தான் வியாபாரி போலீசில் சிக்கினார். மேலும், சொத்தை வாங்கிய அந்த நபர் தான், ஹவாலா பணம் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் தெரிவித்ததும் தெரியவந்தது. சொத்து தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வியாபாரியை போலீசில் சிக்க வைக்க அவர் திட்டமிட்டதும் அம்பலமானது.

அதே சமயத்தில், வியாபாரி ரூ.29 லட்சம் வைத்திருந்ததற்கான ஆவணங்களை சரியாக வைத்திருப்பதாக போலீசில் தெரிவித்துள்ளார். எனினும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் வாகன சோதனையில் கட்டு, கட்டாக ரூ.35 லட்சம் சிக்கிய சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story