பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுசீந்திரத்தில் கோவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுசீந்திரத்தில் கோவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Nov 2020 5:54 AM GMT (Updated: 6 Nov 2020 5:54 AM GMT)

சுசீந்திரத்தில் கோவில் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுசீந்திரம், 

குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த போது இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்களில் 1,036 பணியாளர்கள் பணியாற்றினர். ஆனால் தற்போது 505 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதே சமயத்தில் குமரி மாவட்ட கோவில்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுவதாகவும், கேரள கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

மேலும் பணிமூப்பு மற்றும் கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை, ஓய்வு பெற்றவர்களுக்கு பி.எப். தொகை வழங்காமல் இழுத்தடிக்கும் நிலை உள்ளதாகவும் மாவட்ட கோவில் நிர்வாகம் மீது ஊழியர்களுக்கிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் கோவிலில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை மீன்பிடி தொழிலாளர் சங்க சம்மேளன செயலாளர் அந்தோணி, தோட்ட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வல்ச குமார், முன்னாள் எம்.பி. பெல்லார்மின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆலய ஊழியர் சங்க செயலாளர் அஜித்குமார், பொருளாளர் சவுந்தர், இந்து சமய உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி சங்கர், முத்துசாமி மற்றும் ஏராளமான கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story