கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு


கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Nov 2020 11:33 AM IST (Updated: 6 Nov 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகமானது.

ஈரோடு, 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 100 வளர்ப்பு கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. இதை பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் விலை பேசி பிடித்து சென்றனர். நேற்று வழக்கமான சந்தை கூடியது. இதற்கு தென்காசி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. 400 பசு மாடுகள், 150 எருமை மாடுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

தீபாவளி பண்டிகை

இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.45 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.65 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இதுகுறித்து சந்தை நிர்வாகி ராஜேந்திரன் கூறும்போது, ‘கருங்கல்பாளையம் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், கோவா போன்ற வெளி மாநில வியாபாரிகள் குறைவாகவே வந்திருந்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி விவசாயிகள் தங்கள் மாடுகளை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 80 சதவீதத்திற்கும் மேல் மாடுகள் விற்பனையானது’ என்றார்.

Next Story