தெற்குமாசி வீதியில் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்; போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி


தெற்குமாசி வீதியில் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்; போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 7 Nov 2020 9:45 AM IST (Updated: 7 Nov 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தெற்குமாசி வீதியில் அதிகஅளவில் வாகனங்களை நிறுத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

மதுரை,

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மதுரை கடை வீதிகளில் பொருட்கள் விற்பனை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஜவுளிகள் வாங்குவதற்கும், பொருட்கள் வாங்குவதற்கும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த நிலையில் மதுரை தெற்கு மாசி வீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுகிறது. அங்குள்ள சில பெரிய ஜவுளி நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும், கடை பணியாளர்களும் நிறுவனங்களின் முன்பு ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை அதிக அளவில் நிறுத்தி வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

கார்களில் வருவோர் கடையின் வாசலில் சாலையில் வாகனங்களை நிறுத்தி ஆட்களை இறக்கி, ஏற்றி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிறு சிறு வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும் கொரோனா நோய் தொற்று பற்றிய கவலையின்றி நிறுவனங்கள் செயல்படுகின்றன. போக்குவரத்து போலீசாரும் அங்கு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. கடை முன்பு பெரும் கூட்டத்தை கூடவிடுகின்றனர்.

மேலும் இந்தப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் பாதியில் நிற்பதால் சாலையில் உள்ள குழியில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதில் குழி இருப்பது தெரியாமல் பலர் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.

எனவே பெரு நிறுவனங்களின் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதசாரிகள் நடந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். மேலும் விளக்குத் தூண் பகுதியிலிருந்து மண்சனக்காரத்தெரு வரை சாலையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது, உடனடியாக சம்பந்தபட்ட போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story