கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தடையை மீறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்; 214 பேர் கைது


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தடையை மீறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்; 214 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2020 4:45 AM GMT (Updated: 7 Nov 2020 4:45 AM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கையில் வேல் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க.வினர் 214 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

பா.ஜ.க. சார்பில் மாநிலம் முழுவதும் வேல் யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும் தடையை மீறி யாத்திரை நடைபெறும் என பா.ஜ.க. அறிவித்தது. இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் பா.ஜ.க.வினர் கட்சி கொடிகளுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் கையில் வேல் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்டத் தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராஜேஷ், மாநில விவசாய அணி துணைத்தலைவர் பாலாஜி, மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் லோககராஜா, மகளிர் அணி தலைவி தவமணி, தொழில் பிரிவு தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சர்தார்சிங் வரவேற்றார்.

இதில் கலந்துகொண்டவர்கள் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட விவசாய அணி தலைவர் ஹரிகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த மாவட்ட தலைவர் பாலசுந்தரம் உள்பட 214 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story