அ.தி.மு.க. ஆட்சியில்தான் கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை ரூ.59 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது - விழுப்புரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியில்தான் கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை ரூ.59 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது - விழுப்புரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 7 Nov 2020 10:24 AM IST (Updated: 7 Nov 2020 10:24 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியில்தான் கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை ரூ.59 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என்று விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் கடனுதவி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எல்.சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்கிற ரகுராமன் வரவேற்றார்.

விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக்குழு கடன், சிறு வணிக கடன், டிராக்டர், பவர்டில்லர், கறவை மாடு, வீட்டு வசதி கடன், அடமான கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், மாற்றுத்திறனாளிக்கான கடன், பயிர் கடன், கோவிட்-19 நகை கடன் என 25,456 பேருக்கு ரூ.150 கோடியே 91 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, ரூ.57 லட்சம் மதிப்பில் 3 புதிய கிடங்குகளுக்கான கல்வெட்டினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கூட்டுறவுத்துறை ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உதவி செய்கிற ஒரு துறையாக விளங்கி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம்தான் கூட்டுறவுத்துறையில் சிறந்து விளங்கியதற்காக 29 விருதுகளை பெற்றது. அதில் 2 முறை ஜனாதிபதி விருதும் அடங்கும்.

மாநில அளவில் கூட்டுறவுத்துறையின் மூலம் 2011 முதல் இதுவரை 1 கோடியே 1 லட்சத்து 75 ஆயிரத்து 629 விவசாயிகளுக்கு ரூ.56 ஆயிரத்து 541 கோடியும், நடப்பாண்டில் இதுவரை 6 லட்சத்து 17 ஆயிரத்து 241 விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 762 கோடியும் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 7 லட்சத்து 52 ஆயிரத்து 357 விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 142 கோடி பயிர்க்கடனும், நடப்பாண்டில் இதுவரை 54 ஆயிரத்து 432 விவசாயிகளுக்கு ரூ.389 கோடி வட்டியில்லா விவசாய கடனும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 31.10.2020 வரை 68 ஆயிரத்து 223 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடாக ரூ.126 கோடி வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் 8.5.2020 முதல் 31.10.2020 வரை 15 ஆயிரத்து 241 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.123.75 கோடியும், விழுப்புரம் மாவட்டத்தில் 31.10.2020 வரை 6,433 உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடியும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது வைப்புத்தொகை ரூ.26 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை ரூ.59 ஆயிரம் கோடியாக உள்ளது. ரூ.33 ஆயிரம் கோடி, வைப்புத்தொகை உயர்ந்துள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க. அரசு, மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கூட்டுறவுத்துறை சிறப்பு பணி அலுவலர் ராஜேந்திரன், கூடுதல் பதிவாளர்கள் அந்தோணிசாமி ஜான்பீட்டர், ரவிக்குமார், கூட்டுறவு சங்க விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் பிரபாகரன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் செண்பகவேல், மாநில கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜசேகர், ஆவின் தலைவர் பேட்டை முருகன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, கண்ணன், ராஜா, எசாலம்பன்னீர், மாரங்கியூர் இளங்கோவன், பழனி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஷெரீப், திருக்கோவிலூர் நகர செயலாளர் சுப்பு என்கிற சுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் பிரஸ்குமரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்க சேகர், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கூட்டுறவு சரக துணைப்பதிவாளர் சகுந்தலா நன்றி கூறினார்.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், அதன் முன்னேற்றம் குறித்தும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Next Story