குன்னம் அருகே நள்ளிரவில் பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதை கண்டித்து - சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குன்னம் அருகே நள்ளிரவில் பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதை கண்டித்து - சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 Nov 2020 5:01 AM GMT (Updated: 7 Nov 2020 5:01 AM GMT)

குன்னம் அருகே நள்ளிரவில் பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு சமூகத்தை சேர்ந்த ஜெயக்குமாருக்கும், மற்றொரு சமூகத்தை சேர்ந்த அய்யாசாமி உள்ளிட்ட சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அய்யாசாமி தரப்பினர் தன்னை தாக்கியதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் அய்யாசாமி தரப்பினரை போலீசார் தேடி வந்தனர். அப்போது அய்யாசாமி வீட்டில் இல்லாததால், அவரது மனைவி அமுதாவை நள்ளிரவு நேரத்தில் மருவத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. வழக்கில் சம்பந்தப்பட்டவரை விட்டு விட்டு அவரது மனைவியை நள்ளிரவு நேரத்தில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றதை கண்டித்து பேரளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் -அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நிற்க தொடங்கின. இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச்செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story