அரியலூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது


அரியலூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2020 10:36 AM IST (Updated: 7 Nov 2020 10:36 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையிலான பா.ஜ.க. நிர்வாகிகள், மாநில தலைவர் முருகன் கைது செய்யப்பட்டால் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானித்து, ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று காலை முதலே காத்திருந்தனர். இந்நிலையில் மாநில பா.ஜ.க. தலைவர் முருகன் திருத்தணியில் கைது செய்யப்பட்டதை அறிந்த பா.ஜ.க.வினர், கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தாலுகா அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதற்காக விருத்தாச்சலம் சாலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து 4 ரோடு வழியாக தாலுகா அலுவலகம் செல்ல முற்பட்டனர்.

அப்போது ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி ஆகியோர் தலைமையிலான போலீசார், அவர்களை 4 ரோடு முன்பாக தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் பா.ஜ.க.வினர் போலீசாரை தள்ளிவிட்டு ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பா.ஜ.க. மருத்துவ அணி மாவட்ட தலைவர் பரமேஸ்வரிஆனந்தராஜ், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, மருது, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலால் 4 ரோட்டில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் அவர்கள் மறியலை கைவிட மறுத்ததால் போலீசார், சிலரை வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து சென்றும், சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றும், போலீஸ் வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் மொத்தம் 20 பெண்கள் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் அரியலூரில் 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ராஜீவ் நகர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பா.ஜ.க.வினர் கலைந்து செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 3 பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வர்த்தக அணி பிரிவு செயலாளர் அனிதா, மாவட்ட செயலாளர் நந்தினி, மாவட்ட மகளிரணி செயலாளர் உஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்காததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

திருமானூரில் பா.ஜ.க. சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன் மற்றும் மாவட்ட பொது செயலாளர் மகாலிங்கம் தலைமையில் திருமானூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ஆசைத்தம்பி, மேற்கு ஒன்றிய தலைவர் பிரித்திவிராஜ் ஆகியோர் முன்னிலையில் அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த திருமானூர் போலீசார், பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, மறியலில் ஈடுபட்ட 45 பேரை கைது செய்தனர்.

Next Story