பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக காங்கிரசார் தடையை மீறி சாலை மறியல்


பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக காங்கிரசார் தடையை மீறி சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Nov 2020 11:16 AM IST (Updated: 7 Nov 2020 11:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் நேற்று தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

சிவகாசி,

தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் சிவகாசியில் இருந்து தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட பட்டாசுகளுக்கு ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்கள் விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதித்தது.

இதை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மாநில முதல்-அமைச்சர்களுக்கு பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய கோரி கடிதம் எழுதி உள்ளார்.

இந்தநிலையில் சிவகாசியில் இருந்து தயாரித்து அனுப்பி வைக்கப்படும் பட்டாசுகளை இந்தியாவின் அனைத்து பகுதியிலும் விற்பனை செய்யவும், வெடிக்கவும் அனுமதி வேண்டும் என்று கோரி காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு போலீசார் அனுமதி வழங்காததால் நேற்று சிவகாசியில் உள்ள மாணிக்கம்தாகூர் எம்.பி. அலுவலகம் முன்பு ஒன்று கூடிய காங்கிரசார் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்து, ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த அனுமதி வழங்கினர்.

மாணிக்கம்தாகூர் எம்.பி. அலுவலகம் முன்பு கூடிய காங்கிரசார் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் போட்டனர். பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியபடி சிவகாசி-விருதுநகர் சாலைக்கு சென்றனர்.

அங்கு போலீசாரின் தடையை மீறி சாலையில் படுத்து மறியல் செய்தனர். உடனே போலீசார் சாலையில் படுத்து மறியல் செய்தவர்களை குண்டுகட்டாக தூக்கி வந்து மினிபஸ்சில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சின்னதம்பி, இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், வக்கீல் வெங்கடேசன், விக்னேஷ், சிவராமகிருஷ்ணன் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சிவகாசி பஸ் நிலையத்துக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி, முன்னாள் எம்.பி.க்கள். அழகிரிசாமி, லிங்கம், சமுத்திரம், ஜீவா, இக்பால் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story