போதிய மழை இல்லாததால் பயிரில் நெல்மணி பிடிக்காததால் விவசாயிகள் கவலை


போதிய மழை இல்லாததால் பயிரில் நெல்மணி பிடிக்காததால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 8 Nov 2020 9:22 AM GMT (Updated: 8 Nov 2020 9:22 AM GMT)

போதிய மழை இல்லாததால் பயிரில் நெல்மணி பிடிக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தேவகோட்டை,

தேவகோட்டை வட்டாரத்தில் நெல் நடவு செய்து 60 நாட்கள் பயிராகி உள்ளது. இந்த நேரம் அந்த பயிர் பொதி நிலையில் இருக்க வேண்டும். ஆனால் வளர்ச்சி குன்றி அப்படியே உள்ளது. புதிய நெல் ரகங்கள் நல்ல உயிரோட்டமாக இருந்தபோதிலும், மழை இல்லாததால் வளர்ச்சி என்பது முற்றிலும் இல்லாத நிலையில் உள்ளது. இனி என்ன மழை பெய்தாலும் முழுமையான பலன் கிடைக்க வாய்ப்புகள் கிடையாது.

இப்போது உள்ள பயிர்களுக்கு 2 தடவைக்கு மேல் உரமிட்டு இருக்கவேண்டும்.மழை இல்லாததால் உரமிட முடியாத சூழல் ஏற்பட்டது.இனி ஒருவேளை நல்ல மழை பெய்து தண்ணீர் காட்டினாலும் விளைச்சல் என்பது 50 சதவீதத்திற்கு மேல் கிடைக்காது.இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். சில கிராமங்களில் விதைத்தவுடன் பயிர் முளைக்காமல் போய்விட்டது. புளியால் பிர்காவில் 60 நாட்கள் பயிராக உள்ளது. விவசாயிகள் வேறு என்ன செய்வது என மனக்கவலையில் உள்ளனர்.

ஆய்வின் போது...

இதுபற்றி சின்னகிளியூர் தி.மு.க. செயலாளர் சேகர் கூறும்போது, தொடர்ந்து விளைச்சல் குறைந்து கொண்டே வந்தது. கடந்தாண்டு அதிகமான மழை பெய்து விளைச்சலை தடுத்தது. ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் நஷ்ட ஈடு வழங்க மறுத்துவிட்டது.இனி விளைச்சல் பற்றி காப்பீடு நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, விவசாயிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் கஷ்டங்களையும் உண்மை தன்மைகள் பற்றி எடுத்துரைக்க வாய்ப்பாக அமையும் என்றார்.

Next Story