காளையார்கோவில் அருகே குப்பை கொட்ட வந்த வண்டிகளை சிறைபிடித்த பொதுமக்கள்


காளையார்கோவில் அருகே குப்பை கொட்ட வந்த வண்டிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 8 Nov 2020 9:29 AM GMT (Updated: 8 Nov 2020 9:29 AM GMT)

காளையார்கோவில் அருகே குப்பை கொட்ட வந்த வண்டிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

காளையார்கோவில்,

காளையார்கோவில் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட ஒழுகுளம் கண்மாய் ஆனது காளையார்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கண்மாயின் உட்புறத்தில் தான் மன்னர் முத்துவடுக நாதரின் நினைவிடம் அமைந்துள்ளது. சுமார் 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில் ஒரு பகுதியில்தான் காளையார்கோவில் நகரின் குப்பைகள் அனைத்தும் கொட்டப்படுகின்றன.

இதனால் அந்த பகுதியை சுற்றி வாழும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வந்தனர். குடியிருப்பு அருகே குப்பைகள் குவிவதால் மழைக்காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும் அந்த குப்பையை அடிக்கடி தீயிட்டு எரிப்பதால் சுவாசம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்து வந்தனர்.

அதோடு கண்மாயின் உட்பகுதியில் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து தான் நகரின் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் வினியோகிக்கப்படும் குடிநீரும் மாசுப்படுகிறது. குப்பைகளால் கண்மாயும் பாழாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

சிறைபிடிப்பு போராட்டம்

இந்த நிலையில் காளையார்கோவிலில் சேகரித்த குப்பைகளை கொட்டுவதற்காக தனியாருக்கு சொந்தமான குப்பை வண்டிகள் அங்கு வந்தன. அவற்றை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் கவுன்சிலர்கள் பாண்டியராஜன், கஸ்தூரி குருநாதன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் அவரது கணவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான அருள்ராஜ் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குப்பை கொட்டுவதற்கு வேறு இடத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். உடனே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரையும் அழைத்து கொண்டு கலெக்டரிடம் குப்பை கொட்டுவதற்கு வேறு ஒரு இடம் ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுக்க சிவகங்கைக்கு புறப்பட்டு சென்றனர்.

Next Story